Pongal Vizha

மிசௌரி தமிழ்ச்சங்க பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் சனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும்.

 தமிழர்களின் திருவிழா, உழவர்கள் பெருவிழா - பொங்கல் விழா.

போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று விமரிசையாகவும், குதூகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்தான் இந்த பொங்கல் திருவிழா.

மார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல் திருவிழா. தை முதல் நாளை தற்போது தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் தமிழர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது.

பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும் .

 

மிசௌரி தமிழ்ச்சங்க பொங்கல் விழா காணொளி

  • Asatha Povathu Yaaru - Pongal Vizha2017 - Part1
  • Asatha Povathu Yaaru  - Pongal Vizha 2017 - Part2
  • Asatha Povathu Yaaru - Pongal Vizha 2017 - Part 3
  • Jallikattu Song   Pongal Vizha 2017
  • TSM Revised Bylaw Announcement Pongal Vizha 2017
  • VaalaiIlai Virunthu Appreciation to TSM
  • Vazhai Izhai Virunthu PongalVizha2017

பொங்கல் பண்டிகை:

தை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.

வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.

பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின் வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கலப்பானை உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் போய் பெரும்பாலான இடங்களில் குக்கரே பயன்படுத்தப்படுகிறது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல், பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி பொங்கலை வரவேற்பர்.

தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.

 

பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதை காணலாம்.

பொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும் நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும்.

சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.

மாட்டுப் பொங்கல்:

இதுவும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.

வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.

மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.

 

தமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.

முதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.

பெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.

திருவள்ளுவர் தினம்:

தை மாதம் 2வது நாள் அதாவது ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும். ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர்.

அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது திருக்குறள். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர்.

அதை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாக பிரித்து முக்கனியின் சுவையைப் போல், முத்தமிழின் சுவையைப் போல் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித்துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம் பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு அருமையான தகுதியாகும்.

திருக்குறள் கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது இதன் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!